தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைத்தறி நெசவாளர்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏ. வருகையின்போது கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாழைப்பந்தல் பஞ்சாயத்து, பச்சையம்மன் நகர் பகுதியில், தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஓட்டு சேகரிக்க வர இருப்பது அறிந்த நெசவாளர்கள், வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் அங்கு சென்று கருப்புக் கொடிகளை அகற்றினர். அப்போது, கிராமத்தினருக்கும் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான நிலை உருவானது.
பின்னர், பிரசாரத்திற்கு வந்த எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பனை நோக்கி நெசவாளர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து கைத்தறி நெசவாளர் சரவணன் கூறியதாவது: “வாழைப்பந்தல் பகுதியில் பட்டு கைத்தறி நெசவு தொழிலை நம்பி சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த பருவமழையில் மூன்று மாதங்கள் கைத்தறி இயந்திரங்களில் மழைநீர் தேங்கி தொழில் முடங்கியது.
இதனால், ஒருவேளை உணவிற்கே கஷ்டப்பட்டோம். இந்த நிலையில், எம்.எல்.ஏ. எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
மேலும், எங்கள் மாவட்டத்திலேயே கைத்தறி துறை அமைச்சர் காந்தி உள்ளார். ஆனால், அவரும் எங்கள் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை. அதனால் தான் இந்த எதிர்ப்பை தெரிவிக்கிறோம்,” என்று கூறினார்.
