சென்னை: “விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான்,” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஒரு சகோதரியின் வீட்டுச் சுவரில், அவரது அனுமதியின்றி சிலர் தங்களது கட்சி ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் இருந்த இன்னொரு சகோதரியையும், அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளி பரவி வருகிறது. மகளிர் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான்; இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்ற கோபத்தில் சிலர் இருக்கின்றனர்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டுகின்றனர்.
இத்தகைய அராஜகச் செயல்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
