சென்னை: காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெற்றிக்காக, பல்வேறு சமூகங்களின் ஆதரவைப் பெற அவரது கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நா.த.க. நிர்வாகிகள் கூறுகையில், காரைக்குடி தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை உள்ளதாகவும், தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் 12 முதல் 14 சதவீதம், நகரத்தார் வாக்குகள் சுமார் 12 சதவீதம், யாதவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் சுமார் 10 சதவீதம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதில், பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக அவர்கள் கூறினர். கடந்த 2021 தேர்தலில் அ.ம.மு.க. கட்சி சுமார் 21 சதவீதம் வாக்குகளை பெற்றது என்பதும் குறிப்பிடப்பட்டது.
அதே நேரத்தில், தேவேந்திர குல வேளாளர், நகரத்தார் மற்றும் பிற சமூகங்களின் வாக்குகளும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினர்.
சீமான் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் மட்டுப்படுத்தப்படாதவர் என்பது தங்களின் பலமாக இருப்பதாகவும், அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளுக்கும் அவர் ஆதரவாக இருந்து வந்ததை முன்னிறுத்தி பிரசாரம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இதன் மூலம், பல்வேறு சமூகங்களின் வாக்குகளையும் பெருமளவில் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் நா.த.க. செயல்பட்டு வருகிறது.
