ஊட்டி: நீலகிரி எம்.பி. ராஜா வெளியான ஆடியோவில் கூறியவை அனைத்தும் உண்மையானவை என தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஊட்டியில் நிருபர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் ஒரே அணியாக செயல்பட்டு வருவதாக கூறினார். த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் போட்டியில் இருந்தாலும், அரசியல் நிலைமை இருமுனைப் போட்டியாகவே உள்ளது என்றார். ஒரு பக்கம் ஆளும் தி.மு.க., மறுபக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர முயலும் அ.தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி என அவர் விளக்கினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும் விதம் தவறான நோக்கத்துடன் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கூறிய கருத்தை கனிமொழி திரித்து பேசுவதாகவும், “மலர் வளையம் வைப்போம்” போன்ற கருத்துக்கள் மிரட்டலாகவே தோன்றுகின்றன என்றும் தெரிவித்தார்.
அரசியலில் மரியாதையான சொல்லாடல் அவசியம் என வலியுறுத்திய அவர், இ.பி.எஸ். குறித்து உதயநிதி கூறிய கருத்துக்கள் தரக்குறைவானவை எனவும் விமர்சித்தார். இதனை முதல்வர் மாற்றி விளக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.
மேலும், நாட்டில் மக்கள் நலனில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், 2014ஆம் ஆண்டு 14.5 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே காஸ் சிலிண்டர் இருந்த நிலையில், தற்போது 33 கோடி குடும்பங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீலகிரி எம்.பி. ராஜா வெளியிட்ட ஆடியோ குறித்து பேசுகையில், அது ராஜா பேசியதுதான் என்றும், அதில் கூறியவை உண்மையானவை என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தி.மு.க. தலைவர்கள் அதை மறுத்தாலும், அரசியல் அறிந்த அனைவருக்கும் உண்மை தெளிவாக தெரியும் என்றார். மேலும், அந்த தொகுதியின் எம்.பி. ஆக இருந்தும் ராஜாவை பிரசாரத்திற்கு வர முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ராஜா தெரிவித்த கருத்துகள் மூலம், முதல்வரின் செயல்திறன் குறித்து மக்கள் தெளிவடைந்துள்ளதாகவும், தி.மு.க. மூத்த தலைவரே இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். இது தேர்தல் பிரசாரத்தில் தங்களுக்கு கூடுதல் வலுவை அளித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
