புதுடில்லி:
இந்தியாவின் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமாக ககன்யான் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகியோர் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஏர்டிராப் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி, ககன்யான் திட்டத்தின் தயார்நிலையை உறுதிப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கிய மைல்கல்லாக இந்த சோதனை அமைந்துள்ளது என்றார்.
