பாட்னா:
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், இன்று (ஏப்ரல் 10) ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பீஹாரில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களை வென்றிருந்தாலும், முதல்வராக நிதிஷ் குமாரே பதவியேற்றார்.
இதற்கிடையில், பீஹாரில் விரைவில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமையும் என்ற அரசியல் பேச்சுக்கள் எழுந்தன. இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டார்.
“எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா எம்.பி. உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளேன். ஆனால், ராஜ்யசபா எம்.பி.யாக இருந்ததில்லை. அதனால் டில்லி அரசியலில் செயல்பட விரும்புகிறேன்” என அவர் முன்பே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பீஹார் முதல்வர் பதவியிலிருந்து விலகுவது உறுதியானதாக பார்க்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், புதிய முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும் என பா.ஜ. தலைமையிடம் நிதிஷ் குமார் வலியுறுத்தி வருகிறார். தற்போதைய துணை முதல்வரும், பா.ஜ. மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றதன் மூலம், நிதிஷ் குமாரின் 20 ஆண்டுகளுக்கும் மேலான மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருவதாக பார்க்கப்படுகிறது.
