புதுடில்லி: எதிர்காலத்தில் இந்தியா தாக்குதல் நடத்தினால், மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கட்டாவை குறிவைத்து பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை தாக்கியது. இதில் பல அமைப்புகளின் கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவையற்ற அத்துமீறல்கள் நடந்தால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் இருப்பதாக கூறினார்.
மேலும், இந்தியாவில் தாக்குதல் நடத்தி அதற்கான பழியை பாகிஸ்தான்மீது சுமத்தும் திட்டமும் இருக்கலாம் என அவர் குற்றம்சாட்டினார்.
“அப்படி ஏதாவது நடந்தால், நாங்கள் மேற்கு வங்கத்தின் கொல்கட்டா நகரை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம். அது முன்பெப்போதும் இல்லாத அளவில் கடுமையாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
