திருப்பத்தூர்: “அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், மூன்று மாதங்களில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிப்போம்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், கஞ்சா விற்பனைக்கு திமுகவினர் ஆதரவளிக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
“இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மூன்று மாதங்களில் கஞ்சா விற்பனையை ஒழிப்போம்” என உறுதியளித்தார்.
மேலும், “பழனிசாமி பல தேர்தல்களில் தோல்வியடைந்தவர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நீங்கள் மமதையில் இருப்பதால் இப்படிப் பேசுகிறீர்கள்” என பதிலடி கொடுத்தார்.
கடந்த தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டிய அவர், “2011ல் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை. 2014 லோக்சபா தேர்தலில் ஒரு இடமும் கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வெளியே இருந்த கட்சிக்கு எங்களை பற்றி பேச தகுதி உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையை பார்த்து திமுக காப்பியடித்ததாகவும், கூட்டணி விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
“பா.ஜ உடன் திமுக கூட்டணி வைத்தால் நல்லது; அதிமுக வைத்தால் மதவாத கூட்டணி என்று விமர்சிப்பது ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
