தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரங்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் அவர், சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது, “தமிழகத்தின் எந்த பகுதியிலும் எங்கள் வேட்பாளர்களுக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இது திமுக திட்டமிட்டு உருவாக்கிய சூழல். எங்கள் பிரசாரத்தில் இடையூறு ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன” என குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுத்து, தவெக வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குமுன், கரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்திலும் இடையூறு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“பிரசார கூட்டத்தின் போது, பல காலியான அவசர ஊர்திகள் கூட்டத்திற்குள் அனுப்பப்பட்டன. அந்த ஊர்திகளின் ஓட்டுநர்கள் போதையில் இருந்தனர். அவர்களை தவெக நிர்வாகிகள் பிடித்து காவல்துறைக்கு ஒப்படைத்தனர். ஆனால் காவல்துறை அவர்களை பாதுகாத்து அனுப்பிவிட்டது” என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
