கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலில் பாஜ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என பிரதமர் Narendra Modi நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அசாமில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு கோகாமுக் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, “கடந்த 10 ஆண்டுகளில் அசாம் மாநிலம் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சியை தொடர மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்,” என்றார்.
மேலும், “இந்தத் தேர்தல் வளர்ந்த இந்தியா உருவாகும் பாதையை தீர்மானிக்கும். அசாம் மக்கள் மீண்டும் பாஜவுக்கு ஆசி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்வார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் தோல்வியை சந்திக்கும்,” என கூறினார்.
இதனுடன், அசாம் தேர்தலுக்கான பாஜ தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார். அதில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், “KG முதல் PG வரை இலவச கல்வி வழங்கப்படும். சுய உதவிக்குழு பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 40 லட்சம் பெண்கள் வரை பயன் பெறுவார்கள்,” என கூறினார்.
அதேபோல், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி திட்டங்களும் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
