மெல்போர்ன்: உலகளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சில மாகாணங்களில் பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய பகுதியில் நீடித்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் எரிசக்தி விநியோகம் சீர்குலைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை சமாளிக்க பல நாடுகளில் எரிபொருள் விற்பனை மற்றும் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் இதன் தாக்கம் தீவிரமாக உணரப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.160 வரை உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரயில், டிராம் மற்றும் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தாஸ்மேனியா மாகாணத்திலும் பஸ் மற்றும் படகு போக்குவரத்து ஜூலை 1ஆம் தேதி வரை இலவசமாக்கப்பட்டுள்ளது.
