ஜெருசலேம்: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தமும், இஸ்ரேலின் முக்கிய நலன்களை பாதுகாக்கும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்று முன்னதாக அதிபர் டிரம்புடன் நான் உரையாடினேன். அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து எட்டியுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி, ஒப்பந்தத்தின் மூலம் போர் இலக்குகளை அடையலாம் என அவர் கருதுகிறார்” என்றார்.
மேலும், “அந்த ஒப்பந்தம் எங்கள் முக்கிய நலன்களை பாதுகாக்கும் வகையில் இருக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரான் மற்றும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும், அவர்களின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அணுசக்தி தொடர்பான விஞ்ஞானிகள் மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“எத்தகைய சூழலிலும், இஸ்ரேலின் முக்கிய நலன்களை பாதுகாப்பதில் எந்த தளர்வும் இருக்காது” எனவும் நெதன்யாகு உறுதி தெரிவித்தார்.
