நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சரளைப்பட்டியில் உள்ள கல்குவாரியில், அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உறவினர்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரளைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ‘சங்கரா ப்ளூ மெட்டல்’ கல்குவாரி, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விஜயபாரதி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் வசித்து வந்த மூக்கன் என்பவரின் மகன் கருப்பசாமி (25), மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு வாரமாக காணாமல் போனதாக உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில், குவாரியில் எம்.சாண்ட் குவியலில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுமார் 10 அடி ஆழத்தில் அழுகிய நிலையில் இருந்த கருப்பசாமியின் உடலை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த குவாரியில் ஏற்கனவே சட்டவிரோத செயல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இளைஞர் மரணம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
