சென்னை: தமிழகத்தின் கிராமப்புறங்களில் வீடுகளுக்கான சொத்து வரி திடீரென அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால், சில இடங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக வரி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முக்கிய வருவாய் ஆதாரமாக சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. பொதுவாக, அந்தந்த பகுதிகளின் வாடகை வருவாய் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊரக பகுதிகளில் இருந்த ‘வீட்டு வரி’ முறையை ‘சொத்து வரி’ முறையாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. ஆரம்பத்தில் இது பெயர் மாற்றம் மட்டுமே என கருதப்பட்டாலும், தற்போது நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கிராமங்களில் சொத்துக்கள் சென்ட் மற்றும் ஏர்ஸ் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டு, வீடுகளுக்கு குறைந்த தொகை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, நகர்ப்புறங்களைப் போல சதுர அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது: கிராமப்புறங்களில் வீடு மற்றும் கடைகளுக்கு சதுர அடிப்படையில் குறைந்தபட்சமாக வரி நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் பல இடங்களில் சதுர அடிக்கு ₹1 முதல் ₹5 வரை வசூலிக்கப்படுகிறது.
இதனால், முன்பு ₹50 அளவில் இருந்த வீட்டு வரி, தற்போது ₹500 முதல் ₹5000 வரை உயர்ந்துள்ளது. வாடகை வருவாய் அடிப்படையிலான முறையை பின்பற்றாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக வரி நிர்ணயிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படவில்லை என்றும், வரி செலுத்தச் செல்லும் போது தான் இந்த உயர்வு தெரியவருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
