புதுடில்லியில், நவீன காலத்தில் மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களை ஊடகவியலாளராக கருதி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவது, நியாயமான விசாரணைக்கு சவாலாக மாறிவருகிறது என சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
ஒரு குற்றச்சம்பவம் நடந்தவுடன், போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது மக்கள் மனதில் ஒருதலைபட்சமான கருத்தை உருவாக்குகிறது. இது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கண்ணியத்தையும் பாதிக்கிறது.
இதனைத் தடுக்க, போலீசார் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடத் தடை விதிக்க கோரி ஹேமேந்திர படேல் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம். பன்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பற்றி போலீசார் ஊடகங்களுக்கு தகவல் அளிக்கும் போது எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருதலைபட்சமான தகவல்கள், அந்த நபர் குற்றவாளி என்ற பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் அபாயம் உள்ளது.
எனவே, போலீசார் ஊடகங்களை கையாளும் விதத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) கடைப்பிடிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி அல்ல என்பது முக்கியம் எனவும் கூறப்பட்டது.
டிவி ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டாலும், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பலர் தங்களை ஊடகவியலாளராக காட்டிக் கொண்டு, சட்டத்திலிருந்து தப்பிக்க முயல்வதும் கவலைக்கிடமானதாக உள்ளது.
இதனால், போலீசார் ஊடகங்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், போலீஸ், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களை உள்ளடக்கிய விரிவான மனுவை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.
