புதுடில்லியில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக சித்தரிக்கும் படங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பீஹார் மாநிலம் அர்வால் மாவட்டத்தை சேர்ந்த சித்தநாத் குமார், பிரதமர் மோடி, பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் அரசியல் கட்சி தலைவரின் படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி அவதூறாக உருவாக்கியுள்ளார். பின்னர் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து டில்லி மாநகர போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் குற்றம் புரிந்தவரின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், தனிப்படை அமைத்து பீஹாருக்கு சென்றனர்.
அங்கு சித்தநாத் குமாரை கைது செய்து டில்லிக்கு அழைத்து வந்தனர். தற்போது டில்லி லோதி காலனியில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
