சென்னை: “சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் எப்போதும் கவலைப்படவில்லை” என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பழனிசாமி, திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளதாக கூறினார். மக்கள் நலனைப் பொருட்படுத்தாமல், குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் விமர்சித்தார்.
போதைப்பொருள், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை பரவி இருப்பதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி அருகிலேயே மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், “கடந்த 75 நாட்களில் 246 கொலைகளும், ஒரு ஆண்டில் 1,408 கொலைகளும் நடந்துள்ளன. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன” என்றார்.
காவல் துறை மற்றும் உளவுத்துறை அரசு குடும்பத்திற்காக செயல்படுகின்றன என்றும், பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், சொத்து வரி மற்றும் மின்சார கட்டண உயர்வு மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
“இந்த தேர்தல் திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக இருக்கும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தால், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று பழனிசாமி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
