குவஹாத்தி: அசாம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் முக்கிய எம்பி பிரத்யுத் பர்தோலோய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அசாமின் மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான பிரத்யுத் பர்தோலோய் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மிகுந்த மனவேதனையுடன், காங்கிரஸில் நான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும், எம்பி பதவியிலிருந்தும் விலகுவதை அறிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிருபர்களை சந்தித்த அவர், இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை குறித்து விளக்கமளித்தார். கட்சிக்குள், குறிப்பாக அசாம் காங்கிரஸில் பல்வேறு விஷயங்களில் தன்னை அவமதித்ததாகவும், கட்சி தலைமையிலிருந்தும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
“என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியுடன் பயணித்துள்ளேன். ஆனால் தற்போது நான் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளேன். அண்மைக் காலமாக கட்சியில் தொடருவது மிகவும் கடினமாகியுள்ளது. அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த ராஜினாமா காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
