எர்ணாகுளம்: உலகளாவிய பிரச்னை நடைபெற்று வரும் நிலையில், அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்காசியாவில் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அதே நேரத்தில் மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருப்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
எப்போது நமது நாட்டின் மக்களுக்கு பிரச்னை ஏற்படுகிறதோ, அப்போது அவர்களை பாதுகாக்க எங்கள் அரசு அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறது. இன்றைய இந்தியா தனது குடிமக்களை பிரச்னையில் சிக்கவிடாது. போரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் உள்ள நமது நட்பு நாடுகள், அங்கு வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாத்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. மேலும் நமது தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு, உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
உலகளாவிய பிரச்னை நிலவி வரும் இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அங்கு உள்ள இந்தியர்கள் சிக்கலில் சிக்கலாம். பின்னர் அவர்கள் மோடியை திட்டுவார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு உள்ளது.
மேலும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். தற்போது உங்களுக்கு சேவை செய்ய பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குங்கள். அப்போது வளர்ந்த கேரள மாநிலத்தை நீங்கள் காண்பீர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
