புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் லோக்சபாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தை மூத்த எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையேற்று நடத்தி வருகிறார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சபையில் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றைய அமர்வில் லோக்சபாவில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், கடந்த 11 ஆண்டுகளாக லோக்சபா துணை சபாநாயகரை மத்திய அரசு நியமிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்றும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆனால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை இருப்பதால், இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
