புதுடில்லி: இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட முஸ்லிம் தனிநபர் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி கூறியதாவது: தனிநபர் சட்டங்களை செல்லாது என்று அறிவிப்பதற்குப் பதிலாக, சட்டம் இயற்றும் மன்றங்கள் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது சிறந்ததாக இருக்கும். இந்த நீதிமன்றம் ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பரிந்துரை வழங்கியுள்ளது.
முஸ்லிம் நபர் ஒருவர் தாம் பின்பற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக விவாகரத்து செய்ய முடியும். அதேபோல் தனிநபர் சட்டப்படி இரு தார உறவுகளை செல்லாது என்று அறிவிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இதனால் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமானால், சட்டம் இயற்றும் அதிகாரம் மூலம் புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், இந்த விவகாரத்திற்கு சரியான தீர்வு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதுதான் என்று குறிப்பிட்டார்.
