சென்னை: இதுவரை ‘கஸ்டம்’ தர வரிசையில் இயங்கி வந்த மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் முன்னேறியுள்ளது.
பயணியர் விமான நிலையங்கள் உள்நாட்டு, சர்வதேச மற்றும் ‘கஸ்டம்’ என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்கள் தற்போது சர்வதேச விமான நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.
மதுரை விமான நிலையம் இதுவரை ‘கஸ்டம்’ எனப்படும் சுங்க வசதி கொண்ட விமான நிலையமாக இயங்கி வந்தது. இங்கிருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டன. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்ல சென்னை அல்லது திருச்சி விமான நிலையங்களை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
இதனால் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை நேற்று அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் மதுரையில் இருந்து புதிய சர்வதேச விமான சேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து ஏவியேஷன் வல்லுநர்கள் கூறுகையில், ஒரு விமான நிலையத்தின் தரம் உயர்த்தப்படுவது மட்டுமே போதுமானதல்ல. விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய சர்வதேச சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
விமான நிறுவனங்கள் பெரும்பாலும் ‘ஹப் அண்ட் ஸ்போக்’ முறையில் சேவைகளை இயக்குகின்றன. மேலும் விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களை விட தனியார் நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதன் காரணமாக சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டிருந்தாலும் பல விமான நிலையங்கள் எதிர்பார்த்த அளவில் முன்னேற முடியாமல் உள்ளன. எனவே சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைத்துள்ள நிலையில், புதிய சேவை திட்டங்கள் மற்றும் வழித்தட கொள்கைகளில் மதுரைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
