புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் மற்றும் மேற்கு வங்க அரசு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் தேர்தல் கமிஷனை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திலேயே லோக்சபாவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி கூறுகையில், “இது ஒருங்கிணைந்த குழு முயற்சி. ஒரே எண்ணம் கொண்ட கட்சிகள் இணைந்து இந்த தீர்மானத்தை தயாரித்துள்ளோம். பார்லிமென்டின் இரு அவைகளிலும் இணைந்து செயல்பட உள்ளோம். தலைமை தேர்தல் கமிஷனர் தனது பதவியின் தரத்தை குறைத்து விட்டார்,” என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களிடமிருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.
சட்ட விதிகளின்படி லோக்சபாவில் 100 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 50 எம்பிக்களும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும்.
நடைமுறை என்ன?
சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பதவியில் இருந்து நீக்கும் நடைமுறையைப் போலவே தலைமை தேர்தல் கமிஷனரையும் பதவியில் இருந்து நீக்கும் நடைமுறை உள்ளது. தவறான நடத்தை அல்லது பதவியில் தொடர முடியாது என்பதைக் நிரூபிக்க வேண்டும்.
மேலும் பார்லிமென்டின் ஏதேனும் ஒரு அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்ட விதியாகும்.
