சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கி கொண்டு கொத்தனார் வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் (24) மற்றும் மசரூல் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் எந்த விதமான அனுமதியும் இன்றி படகு வழியாக மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்ததும், அங்கிருந்து கர்நாடகா வழியாக தமிழகம் வந்ததும் தெரியவந்தது.
இருவரையும் செவ்வாப்பேட்டை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல் செங்குன்றம் பகுதியில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம் (36), சஹாலல் இஸ்லாம் (26), ஹரிரூல் இஸ்லாம் (31) ஆகிய மூவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
