உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ராவணாபுரம் ஊராட்சியில், ஏற்கனவே எம்.எல்.ஏ. நிதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், அதே சாலைக்கு ஒன்றிய பொது நிதியில் மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.20 லட்சம் செலவில் 200 மீட்டர் நீளத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு, கடந்த 2024 டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கிடையில் அதே ஊராட்சியில் குறிப்பிட்ட பகுதியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 60 மீட்டர் நீளத்தில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.3.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கலெக்டர் நிர்வாக அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக பிப்ரவரி 18ஆம் தேதி டெண்டர் விடப்பட்டதாகவும், பின்னர் பொள்ளாச்சி தி.மு.க. எம்.பி. ஈஸ்வரசாமி தலைமையில் மார்ச் 4ஆம் தேதி பூமி பூஜை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே சாலைக்கு இரண்டு முறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து முறைகேடு நடந்திருக்கலாம் என புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எம்.பி. ஈஸ்வரசாமியிடம் கேட்டபோது, “ஏதேனும் தவறு நடந்திருந்தால் கலெக்டரிடம் தெரிவித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. மகேந்திரனிடம் கேட்டபோது, “இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நான் தற்போது சென்னையில் இருப்பதால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை.
இதுபோன்று ஆளுங்கட்சியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். நேரில் சென்று ஆய்வு செய்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறினார்.
