டேராடூன்: நாட்டில் புதிய குற்றவியல் சட்டங்களை திறம்பட கையாள்வதிலும், நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் தேசிய அளவில் உத்தராகண்ட் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
நாட்டின் நீதித்துறையை நவீனமயமாக்கி, வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் நோக்கில் ஐ.சி.ஜே.எஸ். (ICJS) எனப்படும் குற்றவியல் நீதி அமைப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் போலீசார், நீதிமன்றங்கள், சிறைகள், தடயவியல் துறை மற்றும் வழக்கு விசாரணை அமைப்புகள் ஆகிய ஐந்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன்படி போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்து கணினியில் பதிவேற்றினால், அந்த தகவலை மற்ற அனைத்து துறைகளும் எளிதாக கையாளும் வகையில் அமைப்பு செயல்படுகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த டிஜிட்டல் முறையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது. அந்த மாநிலம் 93.46 சதவீத செயல்திறன் புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹரியானா, அசாம், சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு தொடர்ந்து கண்காணித்து புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக இந்த சாதனை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ‘இ-சாக்ஷ்யா’ செயலி மூலம் குற்றச்சம்பவங்களை வீடியோ பதிவு செய்வதும், டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாப்பாக சேமிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய குற்றவியல் சட்டங்களின் விதிகள் குறித்து உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும் 23,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ‘நியாய ஸ்ருதி’ மெய்நிகர் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தடயவியல் நடமாடும் வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
