மாமல்லபுரம்: 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500, வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக கட்சியின் மகளிர் தின விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் வருமாறு:
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் நலனில் அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது தவெக கட்சியின் அடிப்படை நிலைப்பாடு. இதற்கென தனி இலாகா உருவாக்கப்படும். அந்த இலாகா தனது நேரடி கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும் என்று விஜய் தெரிவித்தார்.
60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தங்கைகளின் திருமணத்திற்காக ஒரு சவரன் தங்கமும் தரமான பட்டுசேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீர் ஆக வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பு பட்டன்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதோடு ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் இலவச நாப்கின்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவாகரத்து வழக்கு குறித்து விஜய் விளக்கம்:
தன் மீது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு குறித்து விஜய் பேசுவாரா என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். முந்தைய கூட்டத்தில் இதுகுறித்து பேசாமல் மவுனமாக இருந்த விஜய், இந்த நிகழ்ச்சியில் அதைப் பற்றி கருத்து தெரிவித்தார்.
“தொண்டர்கள் வருத்தப்படும் அளவுக்கு விவாகரத்து வழக்கு ஒன்றும் வொர்த் இல்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
சினிமா தயாரிப்பாளர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவுடன் விஜய் கலந்து கொண்டது தொடர்பாக பல்வேறு கேலி மற்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
