புதுடில்லி: “நியூயார்க் நகர மேயரை கூட தேர்ந்தெடுக்க முடியாத டிரம்ப், ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கு பெற வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சையத் கத்தீப்சாதே விமர்சித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட கருத்தில், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு இருந்தது போலவே, ஈரானின் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் அமெரிக்கா பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
வேடிக்கை
இதுகுறித்து டில்லியில் நடைபெற்று வரும் ‘ரெய்சினா உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சையத் கத்தீப்சாதே கூறியதாவது:
ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கு பெற வேண்டும் என்று கூறும் டிரம்பால், தனது நாட்டிலேயே நியூயார்க் நகர மேயரை கூட தேர்வு செய்ய முடியவில்லை. அப்படியிருக்கையில் அவரது பேச்சு வேடிக்கையாக உள்ளது.
இஸ்ரேலுடன் நடைபெறும் இந்த போர் குறித்து சவுதி அரேபியா முதல் ஓமன் வரை அனைத்து நாடுகளுக்கும் தெரியும். இஸ்ரேல் இந்த மோதலில் அமெரிக்காவை இழுத்து வந்துள்ளது. இதை எதிர்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ இருப்பை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் போராடுவோம். அந்த பகுதிகளில் அமெரிக்காவின் இருப்பை முழுமையாக அகற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், அந்த நாட்டின் தலைவரை குறிவைத்து தாக்குவது இதுவரை இல்லாத ஒன்று.
முன்னுதாரணம்
இது போன்ற நடைமுறை உலகளவில் பரவினால் அது மிக ஆபத்தான முன்னுதாரணமாக மாறும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் தலைவரை படுகொலை செய்வது உலகத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் வளைகுடா பகுதிகளில் அமெரிக்க ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவை அங்கு மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சோரம் மம்தானி, டிரம்பின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையே குறிப்பிட்டு ஈரான் அமைச்சர் விமர்சனம் செய்தார்.
