காத்மாண்டு: நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் ‘ராப்’ இசை பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. (தேசிய சுதந்திர கட்சி) பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து ஆட்சி அமைக்க உள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த முடிவு அந்நாட்டு இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
அரசின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஊழல், வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கு எதிரான கோபத்துடன் இணைந்தது.
இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தாங்களாகவே ஒருங்கிணைந்து அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கினர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மைதிகர் மண்டலா பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர்.
போட்டி
இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு பாதுகாப்புப் படையினரை அனுப்பியது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் போராட்டம் வன்முறையாக மாறியது.
அரசு கட்டடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்து சேதப்படுத்தப்பட்டன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இளைஞர்களின் எழுச்சியை தொடர்ந்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. பின்னர் அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
புதிய இடைக்கால அரசு பதவியேற்ற உடன் சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்கியது.
இதற்கிடையில் அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நேபாள காங்கிரசை சேர்ந்த ஷேர் பஹதூர் துபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் பிரசண்டா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
அவர்களை எதிர்த்து 35 வயதான ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா, ஆர்.எஸ்.பி. எனப்படும் தேசிய சுதந்திர கட்சி சார்பில் களம் இறங்கினார்.
ஓட்டுப்பதிவு முடிந்த பின் தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை நேற்று முழுவதும் தொடர்ந்தது. இதில் பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
நேபாளத்தில் மொத்தம் 275 பார்லிமென்ட் தொகுதிகள் உள்ளன. இதில் 165 தொகுதிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 110 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
பெரும்பான்மை
நேற்றிரவு நிலவரப்படி பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. கட்சி 110க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து பெரும்பான்மை நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை அவரது சொந்த தொகுதியான ஜாப்பா–5ல் பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.
அந்நாட்டின் முக்கிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 10 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 10 இடங்களிலும், பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி எட்டு இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளன.
பாலேந்திர ஷா நேபாள இளைஞர் புரட்சிக்கு நேரடியாக தலைமை தாங்கவில்லை என்றாலும், காத்மாண்டு மேயராக இருந்த அவர் இளைஞர்களின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் இளைஞர்களிடையே அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.
