சென்னை: 2030ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:
-
2030ம் ஆண்டுக்குள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம் மற்றும் நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
-
மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
-
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும். 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப் பொருள் உற்பத்தி உயர்த்தப்படும்.
-
அனைத்து அரசு பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி உறுதி செய்யப்படும்.
-
நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழக இளைஞர்கள் உலகளவில் போட்டியிடும் அளவுக்கு திறன் மேம்பாடு செய்யப்படும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
-
ஜவுளி, ஆடை மற்றும் தோல் துறைகளில் பயிற்சி வழங்கி பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றம் உறுதி செய்யப்படும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
-
சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிமைப்படுத்தப்படும். தேவைப்படும் இடங்களில் சமூகநீதி விடுதிகள் அமைக்கப்படும். வீட்டுமனையற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு 2030க்குள் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். உண்டு உறைவிட பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்.
-
கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளுடன் கிராமப்புறங்கள் மேம்படுத்தப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் உத்தமர் காந்தி மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படும்.
-
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடி துறையில் மட்டும் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளி துறையை நவீனமயமாக்கி திருப்பூர் மற்றும் கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.
-
கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும். புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும். மீன் உற்பத்தி 200 டன்னிலிருந்து 400 டன்னாக உயர்த்தப்படும். திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். 2030ம் ஆண்டுக்குள் கால்நடைகளின் எண்ணிக்கை 3 கோடியாக உயர்த்தப்படும். தினசரி 4.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக்குடன் செயல்படப்படும்.
-
திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். கால்நடைகளின் எண்ணிக்கை 3 கோடியாக உயர்த்தப்படும். அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாசார மையங்கள் அமைக்கப்படும். அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்பு உருவாக்கப்படும்.
-
2030ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் கீழ் 5 சிறப்பு தொழில் குழுமங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
-
நவீன சாலை தொழில்நுட்பம் மற்றும் ஏஐ கண்காணிப்பு முறைகள் மூலம் சாலைகள் மற்றும் பாலங்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவில் நகரங்கள் மற்றும் கடலோர சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படும்.
-
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். தமிழக கைத்தறி தயாரிப்புகள் சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும்.
முக்கியமான நாள்
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மண்ணும், மக்களும், மாநிலமும் பயன்பெறும் வகையில் கனவுகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துள்ளேன். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மார்ச் 6 மிக முக்கியமான நாளாக மாறப்போகிறது.
தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்யாகும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டுமல்லாமல் எதிர்காலத் தமிழகத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. எந்த திட்டம் சிறந்தது என்று கேட்டால் அனைத்து திட்டங்களும் முக்கியமானவை என நான் கூறுவேன்.
நிதி நெருக்கடிகள்
இன்னும் பல சாதனைகளை செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பல நெருக்கடிகள் இருந்தன. ஆனால் அந்த காரணங்களை கூறி தப்பிக்க முயல்பவன் நான் அல்ல.
“காரணம் சொல்பவன் காரியம் செய்ய மாட்டான்” என்று கூறுவார்கள். சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் அதை வெற்றியாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவன் நான். தினமும் உழைத்து கொண்டிருக்கிறேன். தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பாக வெளியிடப்பட்டது.
