மதுரை: அடமானம் வைத்த நகைகள் ஏலத்திற்கு சென்ற நிலையில் தன் தாலியை மீட்டுத் தருமாறு கோரிய மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு புதிய தாலி வாங்கித் தந்து உதவிய தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.
மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (35) மாற்றுத் திறனாளி. அவரது கணவர் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
தனலட்சுமிக்கு ஏற்பட்ட குடல் நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால், தோடு மற்றும் தாலி உள்ளிட்ட நகைகளை ஒரு நகைக்கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் அந்த நகைகள் ஏலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தனலட்சுமி சென்றிருந்தார். அங்கு பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது நிலையை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அண்ணாமலை, வழக்கறிஞர் ஜெயந்தி மூலம் அந்த பெண்ணின் நிலையை அறிந்து, அவருக்கு புதிய தாலி வாங்கி வழங்க உதவி செய்தார்.
அண்ணாமலையின் இந்த மனிதநேய செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தனலட்சுமி கூறுகையில், “நான் மாற்றுத் திறனாளி. காதல் திருமணம் செய்ததால் உறவினர்கள் எங்களை ஏற்கவில்லை. பிரதமர் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை சந்தித்து என் தாலியை மீட்டுத் தரும்படி கேட்டேன். அவர் விசாரித்து எனக்கு புதிய தாலி வாங்கித் தந்தார்” என்று தெரிவித்தார்
