சென்னை: வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திமுக கூட்டணியில் தங்கள் கட்சி தொடர்வதை உறுதி செய்திருந்தார். அப்போது நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் கோரப்பட்டது.
இதற்கு பதிலாக திமுக தரப்பில் 6 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க முன்வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுக மற்றும் தேமுதிக இடையே ராஜ்யசபா இடம் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக சார்பில் சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா பதவி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
வரும் மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களில் திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
