மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்ட கருத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட்ட உத்தரவில், ஜனவரி 7ம் தேதி வெளியான செய்தியில் அமைச்சர் ரகுபதி கூறிய கருத்துகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதைத் தடுக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு இடத்தில் நடைபெற வேண்டிய நிகழ்வு அதே இடத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியமாக நடைபெறும் இடத்தைத் தவிர வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்ததாக செய்தியில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், நாளிதழ் செய்திகளை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்று வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி, அமைச்சர் அத்தகைய கருத்தை வெளியிட்டாரா என்பது தெளிவாக அறிய அவரிடமிருந்து விளக்கம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் ஏற்கனவே ஒரு விஷயத்தில் உத்தரவு பிறப்பித்த பிறகு, அதை மாற்றுவது உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே சாத்தியம் என்றும் நீதிபதி தெரிவித்தார். நீதிமன்ற அனுமதி வழங்கிய பிறகு, தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று எந்த அமைச்சர் அல்லது அதிகார அமைப்பும் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஒரு விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வந்துவிட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அதை பின்பற்ற வேண்டும் என்றும், தீர்ப்பை ஏற்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்வதே ஒரே வழி என்றும் நீதிபதி விளக்கினார்.
மேலும், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் அதனை கட்டுப்படுத்தும் அதிகாரியாக யாரும் நடந்து கொள்ள முடியாது என்றும், சட்ட அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என்றும் நீதிபதி கடுமையாக குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி மவுனமாக இருப்பது, மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசு அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
அதே நேரத்தில், தடை உத்தரவு நீதிமன்ற உத்தரவை செயலிழக்கச் செய்யும் நோக்கில் பிறப்பிக்கப்படவில்லை என்று மதுரை கலெக்டர் விளக்கம் அளித்திருப்பதையும் நீதிபதி பதிவு செய்தார்.
இதனை கருத்தில் கொண்டு, பரமசிவம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவின் விசாரணையை முடித்து வைக்கப்படுவதாகவும், தேவையெனில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
