சென்னை: த.வெ.க. கட்சியின் அரசியல் நிலைப்பாடு காரணமாக காங்கிரஸ் கட்சி கூடுதல் அரசியல் பலன் பெற்றுள்ளதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருந்தாலும், அந்த கூட்டணிக்குள் சில மனக்கசப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் த.வெ.க. இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியாக ஒரு வகையில் பலன் அளித்துள்ளது.
அதாவது, த.வெ.க. உடன் இணைந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியதன் மூலம் திமுகவிடம் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளது என அவர் குற்றம்சாட்டினார். த.வெ.க. அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது வலுவான கூட்டணியுடன் போட்டியிடுமா என்பது குறித்து பின்னர் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் த.வெ.க.வில் இணையும் வாய்ப்பும் இருக்கலாம் என்று அவர் கூறினார். அதிமுகவில் அவருக்கு தேர்தல் சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்றும், அவரது மகனுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் மனதில் தோன்றும் அனைத்தையும் வெளிப்படையாக கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். த.வெ.க. தலைவர் விஜய் தனித்து அரசியலில் முன்னேறி முதல்வராக வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்றும், மற்றவர்களுக்காக வாக்கு கேட்கும் நிலைமை அவருக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் த.வெ.க. உடன் கூட்டணி அமைக்க விரும்பும் அரசியல் கட்சிகளை வரவேற்க தயார் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
