புதுடில்லி: உலகில் எழும் எந்த பிரச்னைக்கும் போர் என்பது சரியான தீர்வாக இருக்க முடியாது; மோதல்களை சமாதானமான பேச்சுவார்த்தை வழியாகத் தீர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளைச் சேர்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி மற்றும் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்களைப் பற்றி பிரதமர் மோடி தனது கருத்துகளை வெளியிட்டார்.
ஈரான்–இஸ்ரேல் இடையிலான பதற்றம், அமெரிக்கா மற்றும் உக்ரைன்–ரஷ்யா போர்கள் போன்ற சூழ்நிலைகளை குறிப்பிட்ட அவர், உலக அமைதிக்காக இந்தியா தொடர்ந்து சமாதானத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். எந்த பிரச்னைக்கும் போர் தீர்வாக இருக்க முடியாது என்றும், மோதல்களை ராணுவ நடவடிக்கைகளால் அல்லாது பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் உலகளவில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார். உக்ரைன், மேற்கு ஆசியா போன்ற பகுதிகளில் நடைபெறும் மோதல்களை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேசமயம் உலகளாவிய நிறுவனங்களில் தேவையான சீர்திருத்தங்களை விரைவாக கொண்டு வருவது அவசியம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை பாராட்டினார். இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை யதார்த்தமான உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
