சென்னை: திமுக அரசு தனது ஆட்சியின் இறுதி நாட்களிலும் தமிழக மக்களை திணறடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இருவரை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக நகரங்கள் மற்றும் கிராமங்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது என்றும், இது இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பையும் பாதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் திமுக அரசின் நிர்வாகத் தவறுகள் காரணமாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த தாக்குதலில், ஒடிசாவைச் சேர்ந்த ஜான் மற்றும் திரிநாத் கட்டா ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 65 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 8 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மாநிலத்தில் போதைப்பொருட்களின் ஊடுருவலை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
