மதுரை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மதுரை பொதுக்கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.
மதுரை மண்டேலா ரிங் ரோடு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தென் மாவட்டங்களுக்கு முக்கியமான கூட்டமாக இருந்ததால் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை வாகனங்களில் அழைத்து வந்தனர்.
இதற்காக ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான போலீஸ் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
பிரதமர் வருகை நேரம் நெருங்கிய நிலையில், தமிழக பா.ஜ. தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக பார்க்கிங் பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அங்கு போலீசாரிடம் அதிகமான கட்டுப்பாடுகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியதுடன், பின்னர் போக்குவரத்தை தானே ஒழுங்குபடுத்தி வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த பா.ஜ. தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் காரிலிருந்து இறங்கி நடந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்திற்கு மக்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், போலீசார் போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
