நியூயார்க்: ஈரான் மீது தற்போது நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் ஆரம்பம் மட்டுமே என்றும், மேலும் பெரிய தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போர் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்த சூழலில் ஈரான் மீது நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், தற்போது நடைபெறுவது ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மட்டுமே என்று கூறினார்.
அமெரிக்கா இன்னும் முழு அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றும், எதிர்காலத்தில் பெரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகில் மிகவும் வலுவான ராணுவம் அமெரிக்காவிடம் இருப்பதாகவும், அந்த ராணுவ திறனை தற்போது பயன்படுத்தி வருவதாகவும் டிரம்ப் கூறினார்.
