மஸ்கட்: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்பரப்பில் சென்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
மேற்காசிய நாடுகளையும் அரபிக் கடலையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தின் மூலம் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் உலக நாடுகளுக்கு பெருமளவில் எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றன. உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் சுமார் 20 சதவீதம் இந்த பாதை வழியாகவே கடத்தப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த நீர்வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட எம்கேடி வியோம் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஓமன் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த போது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
