துபாய்: ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் துபாய் பட்டத்து இளவரசரும் துபாயில் உள்ள மாலில் சாதாரணமாக நடந்து சென்று மக்களை சந்தித்து பேசிய காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் துபாய் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தடுத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பலவும் தடுப்புத் தாக்குதலால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹமதான் பின் முகமது பின் ரஷித் ஆகியோர் துபாய் மாலுக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் பெரிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சாதாரணமாக நடந்து சென்று பேசினர்.
அப்போது அதிபர் ஷேக் முகமது ஒரு சிறுமியை அருகில் அழைத்து, அவளது கையை முத்தமிட்டு அன்பாக உரையாடிய காட்சியும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் அங்குள்ள உணவகத்தில் அமர்ந்து காபி அருந்தியும் பொதுமக்களுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பதற்றமான சூழ்நிலையிலும் நாட்டின் தலைவர்கள் பொதுமக்களுடன் இயல்பாக நடந்து கொண்டது, நாடு பாதுகாப்பாக உள்ளது மற்றும் அன்றாட வாழ்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது என்ற செய்தியை உலகிற்கு வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
