காலி: இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ என்ற போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்காசிய நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 18 முதல் 25 வரை இந்தியா அருகிலுள்ள வங்கக்கடலில் ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டு கடல் பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சி முடிந்த பின்னர் அந்த போர்க் கப்பல் நேற்று இலங்கையை கடந்து இந்தியப் பெருங்கடல் நோக்கி பயணித்து கொண்டிருந்தது.
இந்நிலையில், இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட டார்பிடோ ஏவுகணை ஈரானின் போர்க் கப்பலை தாக்கி அதை மூழ்கடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடந்தபோது அந்த கப்பலில் 180 பேர் கொண்ட குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 80 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் கடலில் மிதந்து கொண்டிருந்த கப்பல் திடீரென வெடித்து இரு துண்டுகளாக உடைந்து கடலில் மூழ்கும் காட்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அவர் கூறுகையில், இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரான் போர்க் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் தாக்கி மூழ்கடித்ததாக தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டார்பிடோ மூலம் எதிரி போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தாக்குதலுக்குப் பிறகு ஈரான் கப்பலில் இருந்து அவசர உதவி அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்த மீட்பு பணியில் 30 கடற்படை வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
