புதுடில்லி: மேற்காசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், மதுரையில் இருந்து டில்லி திரும்பிய பிரதமர், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். மேற்காசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு, நிலவர மதிப்பீடு மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
