பீஜிங்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஆட்சியாளர் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதற்கு பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரானும் அறிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் தலைவரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீறலாகும் எனக் கூறப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வடகொரியாவும் இந்த தாக்குதலை ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கையாக விமர்சித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சர்வதேச சட்டங்களை மீறும் செயலாக இதை குறிப்பிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனடி போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
