ஜெருசலேம்: ஈரான் ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி உரையில் அவர் கூறியதாவது: கடந்த பல தசாப்தங்களாக ஈரான் தலைமையகம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தீவிர கோஷங்களை எழுப்பி வருகிறது. பல இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்களின் உயிரிழப்புகளுக்கும் அந்த ஆட்சி காரணம் என குற்றம்சாட்டினார்.
மனிதகுலத்தையே அச்சுறுத்தக்கூடிய அணு ஆயுதங்களை உருவாக்கும் ஆட்சியை தடுக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். அணு விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த போர் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல; அந்த நாட்டின் ஆட்சிக்கு எதிரானது என்று கூறிய நெதன்யாகு, ஈரானின் பல்வேறு இனப் பிரிவினரும் சுதந்திரமான மற்றும் அமைதியான நாட்டை உருவாக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஈரானின் அச்சுறுத்தலை அகற்றும் நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமையை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ நடவடிக்கை தொடரும்; இஸ்ரேல் மக்கள் அரசின் உத்தரவுகளை பின்பற்றி, பொறுமை மற்றும் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
