டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜாதா மற்றும் புரட்சிகர காவல் படை தளபதி முகமது பாக்போர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால், எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று காலை முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரான் மீது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. வழக்கமாக இரவு நேரங்களில் நடைபெறும் தாக்குதல்கள், இம்முறை பகல் நேரத்தில் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெஹ்ரானில் அதிபர் மற்றும் மதகுரு ஆட்சியாளர் கமேனி பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், இதில் முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டம் நடைபெறும் தகவலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேல், தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜாதா மற்றும் புரட்சிகர காவல் படை கமாண்டர் முகமது பாக்போர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மதகுரு கமேனியின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
