ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன என்றும், அதன் தவறுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 வயது சிறுமிகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு எச்பிவி தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் 21,863 பேருக்கு அரசு பணியாணைகளை வழங்கியதுடன், ரூ.16,686 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு பெருமையாக உணரும் விஷயங்களையே காங்கிரஸ் வெளிநாடுகளில் குறைத்து காட்ட முயற்சிக்கிறது. தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்ததன் விரக்தியால், இந்தியாவின் கண்ணியத்தை களங்கப்படுத்துகிறது” என்றார்.
மேலும், “தேசத்தை அவமதிப்பதும், பாதுகாப்புப் படைகளின் மனோபலத்தை பாதிப்பதும் காங்கிரசின் பழக்கமாகி விட்டது. நாட்டின் நலனுக்கான எந்த நடவடிக்கையையும் அது எதிர்க்கிறது” எனவும் விமர்சித்தார்.
காங்கிரஸின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருவதாகவும், அதன் தவறுகளுக்கு மக்கள் ஜனநாயக முறையில் பதிலளித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
