மதுரை: பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான பணி வழங்கப்படாததை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெயதுர்காவேணி தாக்கல் செய்த மனுவில், தனது தந்தை பாலு, ஏரல் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றியபோது, 2021 பிப்ரவரி 1ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மது போதையில் வந்த சரக்கு வாகன ஓட்டுநர் மோதி உயிரிழந்ததாக குறிப்பிட்டார். அப்போது, இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
அதன்படி தானும் விண்ணப்பித்த நிலையில், குடும்பம் வறுமையில் இல்லை எனக் கூறி 2023ஆம் ஆண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. “பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் சமூக விரோதிகளால் கொல்லப்படும் போது, அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை பணி வழங்கப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவை பல இடங்களில் நிறைவேற்றப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், “முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. அதை செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம்” எனக் கூறி அதிருப்தி தெரிவித்தனர்.
அரசு தரப்பில், டி.ஜி.பி. புதிதாக பரிந்துரை செய்துள்ளதாகவும், அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரருக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மார்ச் 13ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
