சென்னை: சிறுபான்மையினரின் வாக்குகளை இலக்காக வைத்து அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தி.மு.க. அரசு மேற்கொள்கிறது என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
பா.ஜ. சிறுபான்மை அணி தேசியச் செயலர் வேலூர் சையத் இப்ராஹிம் எழுதிய ‘பாரதம் 2014க்கு முன் – பின் இஸ்லாமியர்களின் நிலை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் நூலை வெளியிட, முன்னாள் கவர்னர் தமிழிசை பெற்றுக்கொண்டார். பா.ஜ. நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அவர்களை பிரித்தாளும் அரசியல் நடைபெறுகிறது. அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார். மேலும், முத்தலாக் சட்டம், வக்ப் சட்டம் போன்றவை சமூக ஒற்றுமைக்காகவே கொண்டு வரப்பட்டவை என்றும், மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் பயன் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தமிழிசை தனது உரையில், சமூகத்தில் பிரிவினையை உருவாக்குவது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என விமர்சித்தார்.
நூல் எழுதிய வேலூர் சையத் இப்ராஹிம், “என் கருத்துகள் அனைத்தும் மக்களிடம் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதியுள்ளேன். உண்மை மற்றும் தர்மம் பேச வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.
