புதுடில்லி: துறைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து விரிவான ‘ரிப்போர்ட் கார்டு’ தயாரித்து அளிக்குமாறு அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டில்லியில் மத்திய அரசுத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சவுத் பிளாக்கில் இருந்து சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சேவா தீர்த் அலுவலகத்துக்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டதிலிருந்து, அமைச்சரவை கூட்டங்களில் செயல்திறன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய கூட்டத்தில், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த விரிவான செயல்முறை திட்டத்தை வகுத்து, அதனை மதிப்பீடு செய்யும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டார். இதற்காக தனிப்பட்ட வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட படிவம் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்கள், மீதமுள்ள தொகைக்கான காரணங்கள், திட்ட ஆய்வுகள் எத்தனை முறை நடைபெற்றன, அவற்றின் முடிவுகள் என்ன என்பன உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், திட்டங்களால் பயன் பெற்ற மக்களை நேரில் சந்தித்து பெற்ற கருத்துகள் என்ன? அமைச்சராக பொறுப்பேற்ற பின் தாங்கள் சாதித்த முக்கிய சாதனைகள் என்ன? என்பதையும் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட துறையில் அமைச்சர் மாறினாலும், திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தடையின்றி தொடர வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
2047ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ எனப்படும் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய தெளிவான செயல்திட்டம் அவசியம் என்பதால், தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
