புதுடில்லி: காங்கிரசுக்கு ஓட்டளிக்க சாமானிய மக்களுக்கு விருப்பமில்லை; இளைஞர்களின் ஓட்டு அதிகரித்து வருவதால், காங்கிரசின் வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற ஆங்கில தொலைக்காட்சி சேனல் விவாதத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா தனது உண்மையான பலத்தை உணர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு வளர்ச்சி வலுப்பெற்றுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வளர்ச்சியின் இன்ஜினாக மாறியுள்ளது. இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை அதிகரித்ததால் பல நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியா இன்று உலக வளர்ச்சியின் முக்கிய மையமாக மாறியுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியாவின் முன்னேற்றம் உலகை வியக்க வைத்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. வந்தே பாரத், நமோ பாரத் போன்ற அதிவேக ரயில் சேவைகள் இதற்குச் சான்றாகும்.
டில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டின்போது காங்கிரஸ் நடத்திய போராட்டம், அக்கட்சியின் கொள்கைகள் காலாவதியானதை வெளிப்படுத்துகிறது. போராட்டத்தை நியாயப்படுத்த மகாத்மா காந்தியின் பெயரை பயன்படுத்துவது ஆணவத்தின் உச்சம். நாட்டின் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் காங்கிரஸ் ஆதரித்ததில்லை.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், புதிய பார்லிமென்ட் கட்டிடம், குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் சட்டம், சர்ஜிக்கல் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்தூர் ஆகிய அனைத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, சாமானிய மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போட விரும்பவில்லை. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம் காங்கிரசின் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது நான்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அல்லது அதிகாரத்தில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
